போர்க்குற்றங்களையும் இனஅழித்தலையும் மனித குலத்திற்கெதிரான பெருங்குற்றங்களாக இடதுசாரிகள் கருதுவார்களேயானால் உலக நாடுகளின் அத்தனை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் "பொலிட்பீரோ' கடிதமெழுதியிருக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமை அமைப்பில் தமிழர் மீதான ராஜபக்சேவின் கொடிய வெற்றியை பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றிய சீனா, கியூபா, வெனிசுவேலா உள்ளிட்ட இடதுசாரி நாடுகளுக்கு தன் அதிருப்தியை எழுதியிருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் நடந்தபோதும் அது பேசவில்லை. இன்றுவரைக்கும் பேசவில்லை. சரி, குறைந்தபட்சம் தமிழ் மக்களுக்கு அதிகபட்ச உரிமைகளுடன் ஓர் தன்னாட்சி அரசியல் அமைப்பு தரப்பட வேண்டுமெனவேனும் ஓர் தீர்மானம் பொலிட்பீரோவில் நிறைவேற்றினார்களா வென்றால் இல்லை.
இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது பல்வேறு கொள்கை விஷயங்களில் வலுவான தாக்கம் ஏற்படுத்தும் சக்தியாக மார்க்சிஸ்டுகள் தலைமையிலான இடதுசாரிகள் இருந்தனர். தமிழர் பிரச்சினையை ராணுவ ரீதியாக ஒடுக்க வரிந்து நின்ற இலங்கை அரசுக்கு பின்புலமாய் நின்ற இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை குறைந்தபட்சம் ஓர் பாராளுமன்ற விவாதத்திற்குக் கூட மார்க்சிஸ்டுகள் இழுக்க வில்லை. அமெரிக்க-இந்திய அணு ஆயுத ஒப்பந்த விஷயத்தில் ஆட்சியையே கவிழ்க்க வரிந்து நின்றவர்களுக்கு அழிக்கப்பட்ட தமிழருக்காய் ஒரு தீர்மானம் நிறைவேற்றக் கூட மனம் வரவில்லையென்பதுதான் நமது வருத்தம். எனில், அத்தனை தமிழரும் அழிந்து போனால் கூடப் பரவாயில்லை- மொழி வழி தேசியம் வென்று விடக் கூடாதென்ற கொள்கை நிலைப்பாட்டில் மார்க்சிஸ்டுகள் நின்றார்களென்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
முள்ளி வாய்க்காலுக்குப் பின் பிறிதொரு முக்கியமான போக்கும் தமிழகத்து தீவிர இடதுசாரிச் சிந்தனையாளர்களிடையே தெரிகிறது. கொந்தளித்துப் போயிருக்கும் மொழி-இன உணர்வு கொண்ட தமிழ் இளைஞர் களை மாவோயிஸ்டுகளின் பாசறைக்குத் திருப்ப முயலும் போக்கு அது. அவர்களது உத்தி நுட்ப மானது. இந்திய அரசு என ஒன்று இருக்கும்வரை ஈழம் மலராது. எனவே முதலில் இந்திய அரசமைப்பை உடைக்க வேண்டும். மாவோ யிஸ்டுகளின் காலம் மலர்ந்தபின்- அவர்களின் தோழமையோடு ஈழம் உருவாக்கப்படும் என்பதுதான் சுருக்கமான திரைக்கதை.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ள புறச்சூழல்கள் பற்றின விவாதம் இங்கு பொருத்தமற்றது. ஆனால் தமிழ்மொழி-இன உணர்வை, அதுவும் முள்ளிவாய்க்காலுக்குப் பின் இளைஞர்கள் ஒரு தொகுதியினரிடையே நிலவும் உணர்வெழுச்சியை மாவோயிஸ்ட் ஆயுதம் தாங்கிய களத்திற்கு மூலதனமாக்க முயற்சிப்பது மோசடி வேலை. இந்த மோசடிக்கு இடையூறு செய்யக்கூடியதாக, சில நேரங்களில் இந்த "மறக்க முடியுமா?' பகுதி இருப்பதால்தான் "புதிய கலாச்சாரம்' போன்றவர்களுக்குப் புழுக்கம். ஈழ அழிவுக்கு ஒட்டுமொத்த காரணமும் காங்கிரசும், தி.மு.க.வுமே என்பதாக அவர்கள் கட்டமைக்க விரும்பும் காட்சி சலனப்படுவதாய் ரொம்பவே சங்கடப்படுகிறார்கள். மற்றபடி இணையங்களில் உயிர் வாழும் அவர்களுக்கு நடேசன்-புலித்தேவன் படுகொலை என்று மட்டுமல்ல, எல்லா விஷயங்களைப் பற்றினவுமான பன்முகத் தரவுகள் நன்றாகவே தெரியும்.
தனிப்பட்ட முறையில்- தமிழகத்திற்கு தந்தை பெரியார் போதுமென்பதே என் எண்ணம். ஆயுதமின்றி ஓர் மகத்தான அரசியல்-சமூக அதிகார நகர்வினை- குறைபாடுகள் பல கொண்டிருந்தாலும் கூட- நடத்திக் காட்டிய அந்த மாபெரும் ஆளுமையை இன்றைய காலச் சூழலுக்கேற்ப மீள் கண்டெடுத்தல் செய்தாலே போதுமானதெனக் கருதுகிறேன். வன்முறைக் கலாச்சாரம் தமிழகத்தை பின்னோக்கியே தள்ளிச் செல்லும். மற்றபடி மாவோயிஸ்டுகளின் கடைசிப் பொத்தான்கள் இந்தியாவில் இருக்கின்றனவா இல்லை சீனாவில் இருக்கின்றனவா என்பதும் நமக்கு சரியாகப் புலப்படவில்லை. இந்த விவாதத்தினை இப்போதைக்கு தற்காலிகமாக நிறுத்திக் கொள்வோம்.
தமிழகத்திலும், உலகப் புலத்திலும் உணர்வுள்ள தமிழர்கள் ஓரணியில் நின்று செயற்பட முடியாமல் ஆளாளுக்கு அக்கப்போர் செய்து கொண்டிருக்க, ராஜபக்சே அரசு மிகத்தெளிவாக முன் நகர்கிறது. இப்போது கிடைக்கிற செய்திகளின்படி, வடகிழக்கு தமிழ்ப் பகுதியின் வளங்கள் அனைத்தையும்- அதாவது தமிழீழ மக்களின் பாரம்பரிய வரலாற்று உரிமைக்கு உட்பட்ட இயற்கை வளங்கள் அனைத்தையும்- பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று பணம் திரட்டும் பணியில் ராஜபக்சே அரசு தீவிரமாய் இறங்கியுள்ளது.
யாழ்குடாவில் சிமெண்ட் தயாரிப்பின் மூலப் பொருளான சுண்ணாம்புக்கல் பல நூறு லட்சம் டன்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆசியாவிலேயே அதிக தூய்மைத் தன்மை கொண்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் யாழ்குடாவினது என்கிறார்கள். இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் முன்பு காங்கேசன்துறை சிமெண்ட் ஆலை இயங்கி வந்தது. இப்போது சுண் ணாம்புக்கல் சுரங்கங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வேலை மும்முரமாய் நடந்து வருவதாகக் கூறுகிறார்கள். மன்னார் வளைகுடாவில் ஐந்து பெரும் பெட்ரோலியக் களஞ் சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்று சீனாவுக்கும், இன் னொன்று இந்தியாவிற்கும் தாரை வார்க்கப்பட்டாயிற்று. தமிழீழக் கடல், காடுகள் இவற்றை மையமாகக் கொண்டு பல்வேறு பன்னாட்டு வர்த்தகப் பேரங்கள் கொழும்பு நகரில் நடந்து வருவதை நம்பகமான செய்திகள் உறுதி செய் கின்றன.
ஒவ்வொன்றையும் கேள்விப் படத்தான் எனக்கே புரிகிறது இத்துணை இயற்கை வளங்கள் தமிழீழ நில-கடற் பரப்புகளில் இருப்பது. விடுதலைப்புலிகளை அழிப்பதில் சில நாடுகள் காட்டிய அதீத அக்கறைக்கு இவ்வளங்கள் மீதான குறியும் ஓர் காரணமோ என எண்ணவும் தோன்று கிறது. நேர்காணலின் போது பிரபாகரன் அவர்களிடம், ""தமிழ் ஈழம் மலர்ந்தால், தன்னிறை வான ஒரு தேசத்தை கட்டியெழுப்பத் தேவையான இயற்கை வளங்கள் தமிழீழ நிலப்பரப்பில் இருக்கிறதென நம்புகிறீர்களா?'' என நான் கேட்டபோது, ""ஓம்... நிச்சயமாக'' என்று முகம் மலர்ந்து, ஒருவகை பெருமிதம் நிறைய அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. என்னென்ன வளங்கள் என்று அப்போது அவரை நான் தொடர்ந்து வினவவில்லை. ஒவ்வொன்றாக இப்போது தெரிய வருகையில், அவரது முகத்தில் அப்போது படர்ந்த பெருமிதத் தன்னம்பிக்கையின் உள் அர்த்தம் புரிகிறது.
உண்மையில் தன் மக்களையும் நிலத்தையும் பிரபாகரன் நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நேர்மையுடன் நேசித்தார். கள்ளம் தெரியாத நேசம். கபடற்ற நேசம். விலைபோகத் தெரியாத நேசம். உண்மையில் அவர் தனது தொடர்புகள் மூலம்- இன்று ராஜபக்சே செய்வதுபோல்- தமிழீழ நிலப்பரப்பின் வளங்களை உலக சக்திகளுக்குப் பங்கிட்டுத் தர வாக்குறுதிகள் தந்திருப் பாரேயானால், பயங்கரவாதிகள்' என உலக அளவில் பட்டியலிடப்பட்டு புலிகள் சுருக்கி ஒடுக்கப்பட்டிருக்க மாட்டார்கள். திருகோணமலை அமெரிக்காவுக்கு, காங்கேசன்துறை சீனாவுக்கு, சுண்ணாம்புக்கல் ஜப்பானுக்கு, மன்னார் கடலின் பெட்ரோலியக் கிணறுகள் இந்தியாவுக்கு என பங்கு போட்டு விற்க முன்வந்திருப் பாரேயானால் ஒருவேளை உலக நாடுகள் அவரை "விடுதலை வீரன்' எனக் கொண்டாடியிருக்கக்கூடும். ஆனால் பாவம் அவர் நல்லவராயும் நீதிமானாயுமிருந்தார். தன் மக்களுக்கான வளங்கள் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதில் விடாப்பிடியோடிருந்தார்.
ஈழ உணர்வாளர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம்- குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வருகிறவர்கள் கேட்பது- இப்படி நடக்குமென நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. 2001-ல் யாழ் குடாவின் வாயிலில், தனித்தமிழ் ஈழத்திற்கு வெகு அருகில் நின்ற நாம் எப்படி ஏழெட்டு ஆண்டுகளில் அதள பாதாளத்திற்கு வந்தோம்? பலருக்கும் இது சரியான விடைகள் இல்லா கேள்வி. என்னைப் பொறுத்தவரை முக்கிய காரணங்கள் ஐந்து.
கடற்பரப்பில் புலிகள் கட்டியெழுப்பிய மேலாண்மைதான் 1998- 2001 காலப்பரப்பில் அவர்கள் சாதித்த அபார ராணுவ வெற்றிகளுக்கு காரணம். அந்த மேலாண்மையை சமாதான காலத்தில் அவர்கள் இழந்தமை போர்க்களப் பின்னடைவுக்கான முதற்காரணம். 2000-த்தில் ஆனையிறவு பெருவெற்றியை சாத்தியப்படுத்தியது இரண்டாம் உலகப் போரின் வரலாற்றுப் பெருமைமிகு ""நார்மண்டி'' (Normandy) தரையிறக்கத்திற்கு இணையாக ராணுவ நோக்கர்களும் போரியல் நிபுணர்களும் புகழ்ந்த கடற்புலிகளின் தாளையடி- செம்பியன்பற்று தரையிறக்கம். சோழ மன்னர்களுக்குப் பின் கடலில் தமிழ்க்கொடி கம்பீரமாகப் பட்டொளி வீசிப் படபடத்துப் பறந்த நாட்கள் அவை. போரணிகள், தளவாடங்களை துரிதமாக நகர்த்துவதிலும் இலங்கை ராணுவத்திற்கான அதே ஆளணி- பொருள் விநியோக வழிகளை இடைமறிப்பதிலும் கடற்புலிகள் மிக முக்கிய பங்காற்றினர். கடல் மீதான மேலாண்மையை சமாதான காலத்தில் புலிகள் இழந்தது பாரதூரமான ஓர் பின்னடைவு. வாய்ப்பிருந்தால் பின்னர் விரிவாக இதனை நாம் நோக்கலாம்.
ஆயுதங்கள், சுடுபொருட்கள் (Arms and Ammunitions) -குறிப்பாக சுடுபொருட்கள் பற்றாக்குறை இரண்டாவது முக்கிய காரணம். இது விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். பலருக்கும் மர்மமான கே.பி. (K.P.) என பொதுவில் அறியப்பட்ட- செல்வராசா பத்மநாபன் என்றும் குமரன் பத்மநாபன் என்றும் அறியப்பட்ட சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்ற ஆளுமை இந்த விவாதத்தில் முக்கியமானவர்.அருட் தந்தை கஸ்பர் ராஜ்
நக்கீரன் வார இதழ் - மே 8, 2010
No response to “ஈழ மண்ணின் வளம்!”
Post a Comment